சென்னை:
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்து அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைத்தனர்.
அதன்பின் அவை போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 5 வார்டுகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சியில் வார்டு எண் 51, வார்டு எண் 179, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு எண் 16, திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25 ஆகிய 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
கடைசி ஒரு மணி நேரமான 5 மணி முதல் 6 மணிவரை கோவிட் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்ககோரி கமல் கட்சியினர் போராட்டம்