லக்னோ:
உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 10 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கிடையே, அங்கு 3-ம் கட்டமாக நேற்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடந்தது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அகிலேஷ் யாதவ் இன்றைய நவீனகால அவுரங்கசீப். தந்தைக்கு விசுவாசமாக இல்லாதவர், உங்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார். அவுரங்கசீப் தனது தந்தையை சிறையில் அடைத்தார், தனது சகோதரர்களை கொன்றார். அதேதான் அகிலேஷும் செய்கிறார். அகிலேஷ் செய்தது போல் தன்னை யாரும் அவமானப்படுத்தவில்லை என்று முலாயம் சிங்கே வருத்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, 2019 மக்களவை தேர்தலில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ்வை அவுரங்கசீப் உடன் ஒப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்…நாக்பூரில் ரூ.40 கோடி கிரிப்டோகரன்சி மோசடி- மேலும் 7 பேர் கைது