இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்தும் போது, தேசிய தேவையை மாத்திரம் கவனத்திற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், எதிர்காலத்துக்காகத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தாமதமாவதால், உலகத்தின் முன் நமது நாடு பல வருடங்களுக்கான பின்னடைவைச் சந்திக்குமென்றும் எடுத்துரைத்தார்.
கொழும்பு 07, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு 18.02.2022 அன்று திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டு 35ஆம் இலக்க இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகாரச் சட்டத்தின் கீழ் இந்த அதிகார சபை நிறுவப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் வலுச்சக்தி வினைத்திறனை மேம்படுத்தக்கூடிய முன்னணி நிறுவனமாகச் செயற்படுதல், பயன்மிக்கதும் செயற்றிறன்மிக்கதும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வசதிகளை வழங்கல், நிலையான வலுச்சக்தி ஆதாரங்களை முன்கூட்டியே கண்டறிதல் போன்றனவே இந்த நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபையின் நோக்கங்களாகும்.
வலுச்சக்தி அதிகார சபையின் முகாமைத்துவம், ஆராய்ச்சி, மூலோபாயத் திட்டம், வலுச்சக்தி முகாமைத்துவம் போன்ற பிரிவுகளுக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அவற்றின் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நீர், சூரிய சக்தி, காற்று மற்றும் உயிரியப் பொருண்மை போன்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்களைக் கொண்டு மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்குள்ள இயலுமை தொடர்பில், இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபையின் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துத் தகவல் தெரிந்துகொள்ளும் நோக்கிலேயே, ஜனாதிபதி அவர்கள் இந்தத் திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கே சட்டம் காணப்படுகின்றது என்றும் சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்றும் குறிப்பிட்டார். அத்துடன், சரியானதைச் செய்தாலும் அதனைத் தடுப்பதற்கு பல்வேறு குழுக்கள் பல சதித்திட்டங்களை வகுக்கின்றன என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், இந்நாட்டின் மின்சாரத் துறையில் காணப்படும் தடைகளைத் தகர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், ஒரு இலட்சம் வீட்டுக் கூரைகள் மீது சூரியசக்திப் படலங்களைப் பொருத்தும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்தி, அதன் பயனைக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலு இலக்குகளை அடைவதற்கு சட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மின்சார சபைச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினருடன் இணைந்து முன்னெடுத்து, அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை உடன் மேற்கொள்ளவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்துக்கமைய, 2030ஆம் ஆண்டாகும் போது இந்த நாட்டின் மொத்த மின்னுற்பத்தியில் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களின் மூலம் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. அதேபோன்று, நாட்டுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுப் பயன்பாட்டின் மூலம் குறுகிய காலத்துக்குள் தீர்வு காண்பதற்குள்ள இயலுமை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
2021ஆம் ஆண்டில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 1,258 மெகா வொட் மின்சாரம், தேசிய மின்சாரக் கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்டுள்ளது என்று, நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சேபால அவர்கள் குறிப்பிட்டார்.
இதன்படி, உயிரியப் பொருண்மையிலிருந்து 54 மெகாவொட்களும் சிறிய நீர்த் திட்டங்களிலிருந்து 429 மெகாவொட்களும், சூரியசக்திப் படலங்களிலிருந்து 506 மெகாவொட்களும், காற்றிலிருந்து 249 மெகாவொட்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
2030ஆம் ஆண்டாகும் போது இந்த நாட்டின் மொத்த மின்னுற்பத்தியில் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களின் மூலம் பெற்றுக்கொள்வது கடினமான இலக்கு அல்லவென்றும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இராஜாங்க அமைச்சின் செயலாளர் கே.எச்.டீ.கே.சமரகோன், மின்சார சபையின் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன், பதில் பொது முகாமையாளர் ரொஹாந்த அபேசேகர ஆகியோரும் நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபையின் அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
18-02-2022