சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 64.27 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்தரபிரதேசத்தில் நடந்த 3-ம் கட்ட தேர்தலில் 57.58% வாக்குகள் பதிவாகின.
பஞ்சாபின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. எனினும் பிற்பகலில் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்குச்சாவடியில் குவிந்தனர். இதன்காரணமாக வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்தது. மாலை 5 மணி நிலவரப்படி 64.27 சதவீத வாக்குகள் பதிவாகின.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங், கரார் பகுதியில் உள்ள மையத்தில் வாக்கினை பதிவு செய்தார்.பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் சுவாமி சத்யானந்த் கல்லூரியில் வாக்களித்தார். முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரிந்தர் சிங், பாட்டியாலாவில் உள்ள மையத்தில் வாக்களித்தார்.
சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், சர் முக்சர் சாகிப் மாவட்டம், பாதல் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி அகாலி தள வேட்பாளர் பிக்ரம் சிங் மஜிதா நிருபர்களிடம் கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணிஅமைப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
ஜலந்தரின் ரெய்னாக் பஜார் வாக்குச்சாவடியில் ஆளும் காங்கிரஸார் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அகாலி தளம் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் காங்கிரஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பஞ்சாபின் பதார் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் லாப் சிங் காரை காங்கிரஸ் தொண்டர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். பாட்டியாலாவின் பாபு சிங் காலனிபகுதியில் அகாலி தளம், காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதுபோல பல்வேறு இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன.
உ.பி.யில் 57.58% வாக்குப்பதிவு
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் 3-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சிபி பகுதி வாக்குச்சாவடியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள், சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
கான்பூர் பகுதி, ஹட்சன் வாக்குச்சாவடிக்கு வந்த முஸ்லிம் பெண்களின் ஹிஜாபை அகற்ற பாஜக முகவர்கள் கோரியதால் அங்கு பதற்றம் எழுந்தது. பாதுகாப்பு படை வீரர்கள் இருதரப்புக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தி வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற செய்தனர்.
பாபினா தொகுதி ஸ்மிருதி கிராமத்தில் சமாஜ்வாதி, பாஜக தொண்டர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.
இதேபோல வேறு சில பகுதிகளிலும் இரு கட்சிகளின் தொண்டர்களும் மோதிக் கொண்டனர்.பெரும்பாலான பகுதிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.