மலே வீதியில் இருந்து கொம்பனித்தெரு ரயில் நிலையம் வரை மேம்பாலத்தின் அடிப்பகுதியில் வாகன தரிப்பிடத்தை நிர்மாணிக்கவும், வாகன நிறுத்துமிடங்களின் இருபுறமும் கொள்கலன்களுக்கான சேவை பாதைகள் மற்றும் உத்தரானந்த மாவத்தையில் நிர்மாணிக்கப்படும் மேம்பாலத்திற்கு சமாந்தரமாக வீதியின் இருபுறங்களிலும் நடைபாதைகள் நிர்மாணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு புறநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை வரை நிர்மாணிக்கப்படும் இரட்டை மேம்பால பணிகளை நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ஆளும் தரப்பு பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் பார்வையிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மலே வீதியை அணுகும் நீதிபதி அக்பர் மாவத்தை வரையான மேம்பாலம், கொம்பனித்தெரு ரயில் கடவையை கடக்கும்போது 5.3 மீட்டர் உயரத்திற்கு நிர்மாணிக்கப்படும்.
இந்த விஜயத்தின் போது, மலே வீதியில் இருந்து கொம்பனித்தெரு புகையிரத நிலையம் வரையிலான மேம்பாலத்தின் கீழ் வாகன தரிப்பிடத்தை நிர்மாணிப்பது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்தினார். அத்துடன், வாகன தரிப்பிடம் நிர்மாணிக்கப்படும் வீதியின் இருபுறங்களிலும் கொள்கலன் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கான சேவை பாதைகள் அமைக்கப்படும் என திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் நலிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
உத்தரானந்த மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு சமாந்தரமாக வீதியின் இருபுறங்களிலும் நடைபாதைகள் அமைப்பது தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கவனம் செலுத்தினார்.
நீதிபதி அக்பர் மாவத்தையில் உள்ள மேம்பாலம் 207 மீட்டர் நீளமும் 8.4 மீட்டர் அகலமும் கொண்டது. உத்தரானந்த மாவத்தையில் அமைக்கப்படும் மேம்பாலம் 396 மீட்டர் நீளம் கொண்டது. இதன் அகலம் 9.4 மீட்டர்களாகும். இரண்டு மேம்பாலங்களையும் இணைக்கும் வகையில் அமைக்கப்படும் மேம்பாலத்தின் நீளம் 310 மீட்டர்களாகும். இதன் அகலம் 6.9 மீட்டர். இதற்கு 5270 மில்லியன் ரூபா செலவிடப்படும்.
அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவகே, திட்டத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் நலிந்த ரத்நாயக்க மற்றும் நிர்மாண ஒப்பந்ததாரரின் பிரதிநிதிகள் குழுவும் போது கலந்துகொண்டனர்.
ஊடக பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு