ராஞ்சி: ஐந்தாவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் தற்போது உடல்நலக்குறைவால் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
இந்தநிலையில் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.
ராஞ்சி தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ. 139 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று ராஞ்சி நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
லாலு பிரசாத் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று விசாரணைக்கு ஆஜரானார். கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜாரனார்.
ராஞ்சி தோரந்தா கருவூல மோசடி வழக்கில் மொத்தம் 170 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். இதில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் அரசு சாட்சிகளாக மாறியுள்ளனர். 6 பேர் தலைமறைவாக உள்ளனர். மேலும் இருவர் அவர்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். லாலு பிரசாத் உட்பட மீதமுள்ள 99 குற்றவாளிகளுக்கு சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.
மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கு பாட்னாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பாங்க்-பாகல்பூர் கருவூலத்தில் இருந்து சட்டவிரோதமாக பணம் எடுத்தது தொடர்பான வழக்கு இது.