ஆந்திர மாநில தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
மேகபதி கௌதம் ரெட்டி
மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். முன்னதாக, ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு காலை 7.45 மணியளவில் மயங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வீட்டிலேயே பலத்த மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 49.
ஆந்திராவிற்கான தொழிற்சாலை திட்டம் குறித்து கடந்த ஒரு வாரமாக துபாயில் முகாமிட்டு பல்வேறு தொழிலதிபர்களுடன் முதலீடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று, நேற்று ஹைதராபாத் திரும்பிய நிலையில் அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி உயிரிழந்துள்ளார்.
தந்தையின் மரண செய்தி அறிந்து அவரது மகன் மேகபதி ராஜமோகன ரெட்டி, சொந்த ஊர் திரும்பியுள்ளார். ஆந்திர மாநில தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரியவராக அறியப்படும் மேகபதி கௌதம் ரெட்டி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டார். ஜெகன் மோகன் ரெட்டியின் வழிகாட்டுதலின் படி, பெருந்தொற்று காலத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்காக மீட்புத் திட்டங்களை அவர் அமல்படுத்தியது வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.