மெகா மருத்துவமனை அமைக்க முடிவு| Dinamalar

ஹாங்காங்-ஹாங்காங்கில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், தற்காலிகமாக ‘மெகா’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்துள்ள நிர்வாகம், அதற்கான இடத்தை தேடி வருகிறது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசிய நாடான ஹாங்காங்கில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 12 ஆயிரம் மட்டுமே. கடந்த டிச., மாதம் உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் அந்த நாட்டில் பரவத் துவங்கியது. இதனால், வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. சமூகப் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் அமலாகின.இருப்பினும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர்.இதனால், தொற்றுக்கு உள்ளானோருக்கு சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிரமங்கள் உருவாகி உள்ளன. முன்பு, ‘லேசான கொரோனா அறிகுறி இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்’ என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது அது தலைகீழாக மாறி உள்ளது.போதிய இடவசதி இல்லாமல், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் மருத்துவமனைகள் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்களில், லேசான அறிகுறி இருப்போரை வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.சமீபத்திய கணக்கின்படி, போதிய படுக்கை வசதி இன்றி மருத்துவ சிகிச்சைக்காக 12 ஆயிரம் பேர் காத்திருப்பதாக தெரிகிறது. இதனால், பலருக்கும் மருத்துவமனையின் வெளிப்பகுதியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதை சமாளிக்கும் வகையில், தற்காலிகமாக மெகா மருத்துவமனை உருவாக்க, அரசு தரப்பில் இடம் தேடப்பட்டு வருகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பிற்கான முக்கியகாரணம், முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது தான் என தெரிய வந்துள்ளது.இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஹாங்காங்கில் குழந்தைகள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அதேபோல், 70 முதல் 79 வயதிற்கு உட்பட்டோரில் 43 சதவீதம்; 80 வயதிற்கு மேற்பட்டோரில் 27 சதவீதம் பேர் மட்டுமே இரு ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மட்டுமே இதற்கு தீர்வாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, ஹாங்காங்கில் வசிக்கும் 75 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த நிர்வாகம்முடிவு செய்துள்ளது. அத்துடன், மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த, பிரதமர் பதவிக்கு இணையான, நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.