வாஷிங்டன் : “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காவிட்டால், ரஷ்ய அதிபரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசுவார்,” என, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன், அதன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை, ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதற்கு, அமெரிக்காவும், இதர ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க அதிபருக்கான வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி கூறுகையில், ”உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காவிட்டால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசுவார். பேச்சு நடத்த அமெரிக்கா எப்போதும் தயாராகவே உள்ளது,” என்றார்.
இதற்கிடையே, ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஐந்து உக்ரைன் ராணுவ வீரர்கள், தங்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ரஷ்யா நேற்று தெரிவித்தது. எனினும், அந்த தகவலை உக்ரைன் அரசு மறுத்துள்ளது.
Advertisement