கோவை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரத்தை தூண்டிவிட, அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர் எனஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மின்சார, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சரும், கோவை மாவட்டப் பொறுப்பாளருமான அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “கோவையில் எதிர்கட்சியான அதிமுகவினர், வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க சில முயற்சிகளை செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வன்முறை, கலவரத்தை தூண்டிவிட அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக, கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில், அவர்கள் ரகசியக் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு வார்டுக்கு தலா நூற்றுக்கும் மேற்பட்டோர் நாளை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வேட்பாளர்கள், முகவர்கள் வருவார்கள். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, வெற்றிச் சான்றிதழை பெறுவார்கள். இது தான் வழக்கமான தேர்தல் நடைமுறை. ஆனால், அதிமுகவினர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு ஆயிரக்கணக்கானோரை வரவழைத்து, வன்முறையை கட்டவிழ்த்து விட திட்டமிட்டுள்ளனர்.
திமுக வெற்றி பெறும்
வாக்கு எண்ணிக்கை மையத்தில், திமுக தலைமையிலான மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களும், அவர்களது முகவர்களும் எவ்வித வன்முறைக்கும் இடம் தராமல், அதிமுகவினர் வன்முறையில் இறங்கினாலும், அதை பொறுத்துக் கொண்டு, வாக்கு எண்ணிக்கையில் முழு கவனம் செலுத்திட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். கோவையில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்திலும் திமுக வெற்றி பெறும். தமிழக முதல்வரின் சாதனைகளுக்கு, ஒரு மணிமகுடமாக கோவை வாக்காளர்கள் இந்த வெற்றியை வழங்குவர். அதற்கேற்ப வாக்குப்பதிவும் செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றிச் சான்றிதழை நாங்கள் நிச்சயமாக பெறுவோம்.
வாக்குப்பதிவு அன்று வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லலாம். ஆனால், எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் விதிகளை மீறி வாக்குப்பதிவு மையத்துக்குள் சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் போது, அங்குள்ள முகவர்கள் கேள்வி கேட்கத் தான் செய்வர். வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததைப் போல், வாக்கு எண்ணிக்கையும் அமைதியாக நடக்க, திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஒத்துழைப்பு அளிப்பர். குறிப்பிட்ட சில இடங்களில், வாக்குப்பதிவின் போது, சிறுசிறு சம்பவங்கள் நடந்துள்ளன. அது எதிர்கட்சியினரால் ஏற்பட்டவை தான். வாக்கு எண்ணிக்கை விரைவாக நடந்த தேர்தல் அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நேர்மையான, நியாயமான, நடுநிலையான உள்ளாட்சித் தேர்தல், தமிழத்தில் நடந்துள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.