திருவனந்தபுரம் :
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் ஆஷிப் (வயது 40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா பாத்திமா (13), அனோநிஷா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர்.
இவர்கள் 4 பேரும் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் ஆஷிப்பின் சகோதரி மாடிக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் உள்ளே இருந்து எந்தவொரு தகவலும் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்து நச்சுத்தன்மை உடைய வாயு வெளியேறியது. இதனால் போலீசாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட போலீசார் வெளியே சென்றனர்.
பின்னர் வீட்டுக்குள் விஷவாயு படர்ந்து இருப்பதை உணர்ந்த அவர்கள் முதற்கட்டமாக அதனை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது ஜன்னல் இடுக்குகளில் காற்று வெளியேறாதவாறு டேப் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அதனையும் அகற்றி வீடு முழுவதும் பரவியிருந்த விஷ வாயுவை வெளியேற்றிய பிறகு போலீசார் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அங்கு ஒரே அறையில் ஆஷிப் உள்பட 4 பேரும் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 4 பேர் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், விஷ வாயுவை வீட்டுக்குள் நிரப்பி 4 பேர் தற்கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது.
கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயுவை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். கடன் தொல்லை காரணமாக ஆஷிப் இந்த விபரீத தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.