டெல்லி: நாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பையும், கால அட்டவணையையும் மாநில அரசு வெளியிட்டு வருகிறன்றன. CBSE, ICSE தேர்வு வாரியங்களும் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வு நடத்துவதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் உரிமைகளுக்கான ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிடுமோ என்ற பயத்துடன் மாணவர்களை நேரில் தேர்வை எதிர்கொள்ள வைப்பது நியாயமற்றது என்றும், மனிதாபிமானமற்றது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி 10, 12ஆம் வகுப்புக்கான நேரடி தேர்வுகளை ரத்து செய்து கடந்த ஆண்டை போலவே முந்தைய மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவை அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கை நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அறிவித்துள்ளார்.