மூன்றாவது டி20 போட்டியையும் வென்று மேற்கிந்திய தீவுகள் அணியை வழி அனுப்பியிருக்கிறது இந்திய அணி. முந்தைய போட்டிக்கும் இப்போட்டிக்கும் அவ்வளவு வித்தியாசம் ஏதுமில்லை. மிடில் ஓவர்களில் குறைந்த ரன் ரேட்டினை சென்ற ஆட்டத்தில் பன்ட்டும் வெங்கடேஷும் சரி செய்ததுபோல இம்முறை சூர்யகுமாரும் வெங்கடேஷும் சரி செய்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகளின் தொடக்க பேட்டர்கள் வழக்கம்போல சொதப்ப இப்போட்டியிலும் அரைசதம் அடித்து அந்த அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார் பூரன். இத்தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இது. இருந்தும் டெத் ஓவர்களில் இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சுக்கு மேற்கிந்திய பேட்டர்களிடம் எந்த பதிலும் இல்லை.
விராட் கோலியும் ரிஷப் பன்ட்டும் இப்போட்டியில் விளையாடாததால் இந்திய அணியில் வீரர்களின் மாற்றங்கள் மட்டுமல்லாமல் பேட்டிங் பொஷிஷனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. வெகு நாட்களுக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டார். மற்றுமொரு ஓப்பனிங் ஸ்லாட்டில் இஷன் கிஷனை இறக்கிவிட்டு நான்காவது இடத்தில் இறங்கினார் ரோஹித் ஷர்மா. அந்த இடத்தில் இதுவரை 7 முறை மட்டுமே களமிறங்கி 181 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் ரோஹித். அதே போல இந்த ஆட்டத்திலும் 15 பந்துகளை சந்தித்த அவர் கடைசி வரை செட்டில் ஆகாமல் வெறும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
மறுபக்கம் 34 ரன்களை அடித்த இஷன் கிஷன் அதற்காக 31 பந்துகளை எடுத்துக்கொண்டார். இத்தொடரில் கடைசிவரை தன் இயல்பான கேமை வெளியப்படுத்தவே இல்லை இஷன். மூன்று போட்டிகளையும் சேர்த்து அவர் அடித்த ரன்கள் 71. ஆனால் அவர் சந்தித்த மொத்த பந்துகளின் எண்ணிக்கை 83. முதல் இரண்டு போட்டிகளின் வேகப்பந்துவீச்சிற்கு ரொம்பவும் தடுமாறிய அவர் இப்போட்டியில் ஸ்பின்னர் சேஸின் ஷார்ட் பாலை புல் செய்ய முயன்று ஸ்டம்பை பறிகொடுத்தார்.
ரோஹித் ஆட்டமிழக்கும்போது 14 ஓவர்களில் முடிவில் 93 ரன்களே எடுத்திருந்தது இந்தியா. அப்போதைக்கு 150 ரன்களே கேள்விக்குறியாக இருந்த நிலையில் சூர்யகுமார்-வெங்கடேஷ் ஐயர் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 16 மற்றும் 17-வது ஓவர்களில் 17 ரன்கள், 19 மற்றும் 20-வது ஓவர்களில் 21 ரன்கள் என விளாசி தள்ள கடைசியில் 184 ரன்களைக் குவித்தது இந்திய அணி.
அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் பேட்டர்களிடம் இருந்து ரன்கள் வேகமாக வந்தாலும் மறுபுறம் விக்கெட்டுகளும் சரிந்த வண்ணமிருந்தன. நிக்கோலஸ் பூரன் மட்டுமே ஒரு முனையிலிருந்து நிலையாக ஆடினார். கடந்த மூன்று போட்டிகளாகவும் இதையே தான் செய்கிறார் அவர். ஆனால் எதிர் முனையில் போதிய ஆதரவு இல்லாததால் எந்தப் போட்டியிலும் அவர்களால் எல்லைக் கோட்டினைத் தாண்ட முடியவில்லை.
7-வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. ஆனால் அடுத்த நான்கு ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மளமளவென விழ 12 ஓவர் முடிவில் 100/6 என்றாகியது அந்த அணியின் ஸ்கோர். பூரனுக்கு ரோமிரோ ஷெப்பர்ட் மட்டும் கொஞ்சம் உதவ அணியின் ஸ்கோர் கொஞ்சம் உயர்ந்தது. கடைசி 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்ஷல் படேல் மிக அருமையாக வீசி முடிக்க 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
இவ்வெற்றியின் மூலம் டி20 தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா. மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இத்தொடரை பொறுத்தவரை மிடில் ஆர்டர் பேட்டிங், டெத் பௌலிங் என பல்வேறு பாக்ஸ்களையும் டிக் செய்துள்ளது இந்திய அணி. அடுத்த வாரம் தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான தொடரில் மீதமுள்ளவற்றை சரி செய்து உலகக்கோப்பைக்கான திட்டமிடலை இப்போதே செயல்படுத்தி ஒத்திகை பார்க்கும் இந்தியா.