TNPSC group 2 exam time and age relaxation details for aspirants: குரூப் மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில், பிப்ரவரி 23 – மார்ச் 23 ஆம் தேதிவரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும். மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும்.
இதையும் படியுங்கள்: நாகப்பட்டினம் மாவட்ட TNEB வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இதில் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
தேர்வு நேரம் மாற்றம்
இதுவரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற தேர்வுகள், இனி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதன்படி காலை வேலையில் 9.30 முதல் 12.30 வரை தேர்வு நடைபெறும். பிற்பகலில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம்போல் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
வயது வரம்பு தளர்வு
கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாததால் அரசு அறிவித்துள்ள படி பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா காரணமாக வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் எஸ்சி, எஸ்டி, அருந்ததியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத உச்சபட்ச வயது வரம்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 2 பதவிகள்
நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.
அதே சமயம், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி
குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை
குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.