ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், டொனெட்ஸ்க் நகரின் மையத்தில் திங்கள்கிழமை அதிகாலை குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நகரம் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, குண்டுவெடிப்பு குறித்த முழுமையாக தகவல் எதுவும் வெளிவரவில்லை.
அறிக்கைகளின்படி, மாஸ்கோ ஆதரவில் உள்ள டொனெட்ஸ்கில் இருந்து வெளியேறிய மக்கள், தென்மேற்கு ரஷ்ய நகரமான தாகன்ரோக்கில் இரயில்களுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் பாதுகாப்பான மற்ற இடங்களுக்கு செல்ல காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்ன்றன.
மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகள் உக்ரைன் தங்கள் பகுதிக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. மேலும், பொது அணிதிரட்டலுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் உக்ரைன் தொடர்பான உச்சிமாநாட்டிற்கு கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) ரஷ்ய தலைவருடன் தொலைபேசியில் உரையாடிய பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உச்சிமாநாடு பற்றிய முக்கியமான செய்தியை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில், திங்களன்று (பிப்ரவரி 21) கிரெம்ளின் உக்ரைன் தொடர்பான பைடன்-புடின் உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல என்று கூறியது.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்; உக்ரைனில் போர் மேகங்கள் விலகுமா!
“எந்தவிதமான உச்சிமாநாடுகளையும் ஏற்பாடு செய்வதற்கான, குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றி பேசுவதற்கான சரியான நேரம் இது அல்ல” என்று கிரெம்ளின் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த உச்சிமாநாடு “உறுதியான திட்டங்கள்” எதுவும் வகுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய வாரங்களில் ரஷ்யா 150,000 துருப்புகளை உக்ரைனின் எல்லைகளுக்கு அருகில் நிறுத்தியுள்ளது என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நட்பு நாடுகள் மதிப்பிட்டுள்ளன.
அமெரிக்க அதிகாரி ஒருவர் வெள்ளியன்று செய்தியாளர்களிடம், “நாற்பது முதல் ஐம்பது சதவிகிதத்தினர் (அந்த துருப்புக்களில்) தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளனர்.” என்று குறிப்பிட்டார்.
ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் இறுதி கட்ட தாக்குதலை நடத்த தயாராக இருக்க அவர்களுக்கு கட்டளை இடப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில்தான் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகளை புகுத்த ரஷ்யா தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.