கொழும்பு, : ‘இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கும், 13வது திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தலையிட வேண்டும்’ என, அண்டை நாடான இலங்கையை சேர்ந்த தமிழர் கட்சிகள், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளன.
இலங்கை – இந்தியா இடையே, 1987ல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில், அப்போது பிரதமராக இருந்த ராஜிவ், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே கையெழுத்திட்டனர். இதன்படி, ‘இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கப்படும்; மாகாண கவுன்சில் தேர்தல் நடத்துவது உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில், 13வது திருத்த சட்டம் நடைமுறைபடுத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கும் சிங்களர்களின் கட்சிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ௧௩வது திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட தமிழர் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக, இந்தியா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து குரல் கொடுப்பதில், தமிழத்துக்கு அதிக பங்கு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.
இலங்கை தமிழர்கள் சுயமரியாதை, கண்ணியம், அமைதியுடன் வாழ்வதை உறுதி செய்வதில், தமிழகத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால், ௧௩வது திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும். இதை அமல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு, இந்திய அரசிடம் நீங்கள் கூற வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.
Advertisement