கொல்கத்தா,
டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வீரர்கள் தொடர்ந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை குறித்து இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும்போது;
டி20 உலக கோப்பை போட்டிக்கான அணி எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழுவினர், அணி நிர்வாகம் என எங்கள் அனைவருக்குமே ஒரு தெளிவு இருக்கிறது.
ஏற்கனவே இருக்கும் அணியை சற்று பொருத்தமானதாக மாற்ற உள்ளோம். ஒவ்வொரு வீரருக்குமான பணிச்சுமையை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது உள்ள வீரர்களில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு ஏற்ப திறமையுடன் இருப்பவர்கள் குறித்து ஒரு தெளிவு இருக்கிறது. எல்லோருக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்பை தர விரும்புகிறோம்.
டி20 போட்டி கடினமானது ஆகும். அதில் ஆடும் வீரர்களை குறுகிய காலத்தில் எடை போட இயலாது. அவர்களது ஆட்டத்தை அறிய சரியான வாய்ப்புகள் வழங்கப்படும். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆவேஷ் கான் போன்ற திறமையான வீரர்களை ஒருசில போட்டிகளில் விளையாடியதை வைத்து மதிப்பிட மாட்டோம். ஒரு தொடர், ஒரு ஆட்டத்தை கொண்டு அவர்கள் திறமையை மதிப்பிடமாட்டோம்.
அவர்கள் நன்றாக விளையாடியதால்தான் இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளனர். அவர்களுக்கும் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவோம். இவ்வாறு ராகுல் டிராவில் கூறினார்.