நிகழும் பிலவ வருடம் பங்குனி 7-ம் தேதி (21.3.22) திங்கள்கிழமை உத்தராயனப் புண்ணிய காலம், சசி ருதுவில்… கிருஷ்ண பட்சம் சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், வியாகாதம் நாமயோகம், பவம் நாமகரணம் – அமிர்த யோகத்தில், பஞ்சபட்சியில் காகம் நடைபயிலும் நேரத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் (பிற்பகல் 2:54 மணி) ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் ராகு பகவானும், விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்குள் கேது பகவானும் நுழைகின்றனர்.
21.3.22 முதல் 8.10.23 வரை ராகு மேஷத் திலும், கேது துலாத்திலும் இருந்து பலன் தருவார்கள். சொந்த வீடு என்று சொல்லிக் கொள்ள எந்த வீடும் இல்லாவிட்டாலும் வந்த வீட்டை ஆக்கிரமித்து அதிகாரம் செய்வ துடன் உரிமையாளருக்கே உதறல் தரும் கிரகங்கள்தான் ராகுவும் கேதுவும்.
நல்லவர்களைப் பொல்லாதவர்களாகவும், பொல்லாதவர்களை வல்லவர்களாகவும் ஆக்குவார்கள். ஒரு மனிதனின் அடிமனதில் மறைந்து கிடக்கும் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி மிரள வைப்பார்கள்.
படிப்பில் தங்கப் பதக்கம், பாராட்டுப் பெற்றவர்களைக்கூட தங்களின் அனுபவ அறிவால் ஆட்டிப் படைப்பவர்கள் ராகுவும் கேதுவும். குருவை சிஷ்யனாகவும், சிஷ்யனைக் குருவாகவும், முதலாளியை தொழிலாளியாகவும் தொழிலாளியை முதலாளியாகவும் மாற்றி வேடிக்கை பார்ப்பதெல்லாம் இவர்களின் வேலைதான்.
ராகுவின் பலன்கள்
கால புருஷ தத்துவத்துக்கு தன-தான்ய-சம்பத்து வீடாகிய 2-ம் வீட்டிலிருந்து மேஷத்துக்குள் ராகு வந்து அமர்வதால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். சரியான வேலை, சம்பாத்தியம் இல்லாமல் இருந்தவர்களுக்குத் தகுதிக்கேற்ற உத்தி யோகம் அமையும். காலபுருஷ தத்துவத்தின் படி உடலின் தலைப்பகுதிக்கு ராகு வருவதால் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்குப் பாதிப்புகள் வரும்.
ரியல் எஸ்டேட் தொழிலைக் கட்டுப்படுத்தப் புது சட்டங்கள் வரும். காவல்துறை முதலான பாதுகாப்புத் துறை சார்ந்த அன்பர்களிடையே பிரச்னைகள் வரும்.
மலைப் பகுதிகளில் வன விலங்குகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும். நிலச் சரிவால் உயிரிழப்பு நிகழ வாய்ப்பு உண்டு. கனிம, கரிமங்கள் வளங்கள் கண்டறியப் படும். புது சுரங்கப் பாதைகள் தெரிய வரும்.
உலகத் தலைவர்களில் சிலருக்குத் திடீர் பாதிப்பு ஏற்படும். ரத்தத்தில் கலக்கக் கூடிய வைரஸ் பரவும். விலைவாசி உயரும். போர்த் தளவாட உற்பத்தி அதிகமாகும். இந்தியா நுட்பமான ஆயுதங்களைத் தயாரிக்கும். தலையில் காயப்படும் நிலை அதிகரிக்கும். தலைக்கவசம் அணிவது நல்லது.
கேதுவின் பலன்கள்
வியாபரிகளுக்கு நெருக்கடிகள் வரும். உணவுப் பொருள் பதுக்கல்கள் அதிகமாகும். கெட்டுப் போன மருந்துகள், தரமற்ற உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப் படும். புதியவகை தடுப்பூசி அறிமுகமாகும். நீதித்துறையில் கலக்கம் ஏற்படும். சில தீர்ப்புக்கு எதிராகப் மக்கள் போராடுவர். போக்குவரத்து அதிகரிக்கும்.
பட்டு, ஜவுளி, வாசனைத் திரவியங்கள், சொகுசு வாகன உற்பத்தி பெருகும். நகைத் தொழில், ஆபரணம், சங்கீதம், இசை, பாட்டு உள்ளிட்ட நம் பாரத நாட்டுப் பண்பாட்டுக் கலாசார விஷயங்களுக்கு பலரும் உரிமை கொண்டாடுவார்கள். கலைஞர்கள் பாதிப்பு அடைவார்கள்.