சென்னை: ‘அ.தி.மு.க., தொடர்ந்து மக்கள் பணியில், தன்னை முழுமையாக அர்ப்பணித்து பாடுபடும்’ என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஒட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி. மாற்று அணியினர் பல வகை முயற்சிகளுக்கு மயங்கி விடாமல், தெளிவான சிந்தனையுடன், ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு ஓட்டளித்து உள்ளீர்கள்.
உங்கள் அன்பும், ஆதரவும், கட்சியின் எதிர்கால வெற்றிக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் வணக்கமும், நன்றியும் உரித்தாகுக.
எந்த வகையான சஞ்சலத்திற்கும், சபலத்திற்கும் இடம் தராமல், கொண்ட கொள்கைக்காகவும், கட்சியின் வெற்றிக்காகவும், எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உழைத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவு அளித்த தோழமை இயக்கங்கள், நட்பு அமைப்புகளுக்கும் நன்றி.
தேர்தலில் வெற்றி பெற்று, புதிய பதவிகளுக்கு செல்பவர்களுக்கு நல்வாழ்த்துகள். மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்ற இருக்கும் அனைவரும், கட்சி கொள்கைகளை மனதில் வைத்து, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதத்தில், சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
அ.தி.மு.க., என்றென்றும் மக்களுக்கான இயக்கம். எத்தனை இன்னல்கள், அச்சுறுத்தல்கள் வந்தாலும், அஞ்சாது மக்கள் பணியாற்றும். தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பாடுபடும்.இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.