லாகூர்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடனான வர்த்தக தொடர்புக்கு பாகிஸ்தான் தடை விதித்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச்சில் பாகிஸ்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு குழுவானது இந்தியாவிடம் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தியை இறக்குமதி செய்வதற்கு மட்டும் அனுமதி அளித்தது. எனினும் இந்த முடிவு அந்நாட்டின் நிதியமைச்சகத்தால் உடனடியாக திரும்ப பெறப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூர் ஊடகம் ஒன்றில் நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘‘வர்த்தக அமைச்சகத்தை பொறுத்தவரை, இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது தான் அதன் நிலைப்பாடாகும். உடனடியாக இதனை தொடங்க வேண்டும். இந்தியாவுடன் வர்த்தக உறவை தொடங்குவது என்பது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பாகிஸ்தானுக்கு மிகவும் பயன்படும்’’ என்றார். கொரோனா பாதிப்பால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாகிஸ்தான், சீனாவிடம் பெருமளவில் கடன் வாங்கி திணறிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.