லாகூர் : இந்தியா உடனான வர்த்தக உறவுகளை மீண்டும் துவக்க பாக். பிரதமர் இம்ரான் கானின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு – காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நம் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை துண்டித்தது.
அன்று முதல் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் முடங்கி உள்ளது. இதை மீண்டும் துவக்க பாக். அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இந்நிலையில் இந்தியாவுடன் வர்த்தகத்தை மீண்டும் துவங்க பாக். பிரதமர் இம்ரான் கானின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் விருப்பம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:இந்த நேரத்தில் இந்தியா உடனான வர்த்தக நடவடிக்கைகள் துவங்கப்பட வேண்டியது அவசியம். அது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.பாக். வர்த்தக அமைச்சகம் இதில் உறுதியாக உள்ளது. வர்த்தகத் துறை ஆலோசகரான எனக்கும் தனிப்பட்ட முறையில் இதே நிலைப்பாடு தான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அப்துல் ரசாக் தாவூதின் இந்த அறிக்கை இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வர்த்தக உறவுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Advertisement