ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் உட்பட அனைத்துத் தொகுப்புகளும் பாராளுமன்றத்தில் ஒப்படைப்பு…

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இறுதி அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய சாட்சியப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஆவணத் தொகுப்புகளை, பாராளுமன்றத்தில் ஒப்படைத்தது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியங்களுக்கமைய தயாரிக்கப்பட்ட 88 தொகுப்புகளுடனான முழுமையான அறிக்கை, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர அவர்களினால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களிடம் இன்று (22) முற்பகல் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, 2021 ஏப்ரல் 08ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட போதிலும், சட்டச் சிக்கல்கள் காரணமாக, சாட்சியப் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலதிகப் பரிசீலனைக்காகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் ஆலோசனையின் பிரகாரம், மேற்படி ஆவணங்கள் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
22.02.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.