ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியைச் சந்தித்து அண்மையில் உரையாடினார்.
நீண்ட அந்த உரையாடலிலிருந்து சில துளிகள்.
உங்களை யாரும் நிராகரித்ததுண்டா?
“அதெல்லாம் பண்ணியிருக்கிறார்கள். அது இல்லாமல் எப்படி. ஆனால், என்னிடம் கடினமாக நடந்துகொண்டு பின்னர் என் வாசலில் வந்து மீண்டும் நிற்பது அவர்களுக்குக் கடினமாக இருக்குமல்லவா. அதனால் அவர்களை நான் மகிழ்ச்சியுடனேயே வரவேற்பேன். அவர்கள்மீது எனக்குக் கோபம் இல்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன். இருக்கும். ஆனால் அது பிறருக்குக் கேடு விளைவிக்கும் வண்ணம் இருக்காது.”
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? Connectivity, Positivity பற்றியெல்லாம் சமீபமாக நீங்கள் அதிகம் பேசுகிறீர்களே.
“அந்தக் கருத்து எனக்கு மாறிக்கொண்டே இருக்கும். அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. இயக்குநர் மணிகண்டனிடம் அவரின் படத்திற்கு ஏன் ‘கடைசி விவசாயி’ என்று தலைப்பு வைத்துள்ளீர்கள் என்று கேள்விகேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் ‘கடைசி என்பது புதிய ஒன்றிற்கான தொடக்கம்’ என்று பதிலளித்தார். இங்கு முடிவு என்று எதுவுமே கிடையாது. ஒரு வட்டத்தை வரைந்து முடிக்கும் போது அது அடுத்த வட்டத்திற்கான தொடக்கம் அல்லவா. அதைப்போலத்தான் இங்குள்ள அனைத்தையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக நான் பார்க்கிறேன்.”
வரலாற்று ரீதியான திரைப்படங்கள் மீது உங்களுடைய பார்வை என்ன?
“மணி சார் எடுக்கும் பொன்னியின் செல்வனுக்கு மிக ஆர்வமாகக் காத்திருக்கிறேன். அதேபோல ராஜமௌலியின் பாகுபலியும் நம் கற்பனைக்கு மீறி பிரமாண்டமாக இருந்தது. ஆனால் இது மாதிரியான படங்கள் எந்தக் கோணத்தில் கையாளப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், ஒருகதையை நம்பி மிகப் பெரிய அளவிலான பணம் செலவு செய்யப்படும்போது அதைத் திரும்பவும் வசூலிப்பதற்கான காரணத்தையும் அக்கதையுடன் சேர்த்தே வைக்கவேண்டி இருக்கிறது. இது மாதிரியான படங்கள் வருவதை நான் வரவேற்கிறேன்.
ஆனால், அப்படங்கள் குறித்து எனக்கு இன்னொரு கருத்தும் உள்ளது. புத்தகங்களில் இருக்கும் வரை அதில் வரும் அத்தனை காட்சிகளும் நம் கற்பனைக்கேற்றவாறு விரிகிறது. அது திரைப்படம் ஆகும்போது அதில் வரும் காட்சியோடு மட்டும் நாம் சுருங்கிவிடுகிறோம். ஆனால், எல்லாமே அனுபவம்தான்.”
சமீப காலமாக திரைப்படத்தைத் தாண்டி பல்வேறு தளங்களிலும் நீங்கள் பணியாற்றுவதை ஒரு கலைஞனுக்குரிய தவிப்பு என்று சொல்லலாமா?
“என்னுடைய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானதையடுத்து பல்வேறு மீம்கள் வெளியானதுதான் இதைப் பேசுபொருளாக்கியது. அந்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியானதற்கான காரணம் எனக்கு மட்டும்தான் தெரியும். அப்படங்கள் குறித்து மக்கள் மத்தியில் சிறிது அதிருப்தி இருந்தாலும் அது வேண்டுமென்றே தேவையில்லாத நாடகம் ஆக்கப்பட்டது. அதைச் செய்தது யார் என்றும் எனக்குத் தெரியும்.
ஆனால், அவர்கள் என்னைப் பற்றிப் பேசவில்லை. என் கலையை, வேலையைப் பற்றிதான் பேசியுள்ளார்கள். அவர்களுக்கு என் வேலை மூலமாகத்தான் நான் பதில் சொல்வேன்.”
விஜய் சேதுபதியின் முழு நேர்காணலை கீழுள்ள லிங்கில் காணுங்கள்.