எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடானது இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக எல்ஐசிபாலிசி தாரர்களுக்கு, மொத்த பங்கு வெளியீட்டில் 10% ஒதுக்கீடு செய்யப்படலாம்.
மேலும் பாலிசிதாரர்களுக்கு பங்கு விலையில் 5% தள்ளுபடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சலுகைகள் கிடைக்கும்
இதற்கிடையில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமும், எல்ஐசி பங்கு வெளியீட்டின் போது கொடுக்கப்படும் சலுகைகளுக்கு பொருந்தும் என எல்ஐசி-யின் தலைவர் எம் ஆர் குமார் தெரிவித்துள்ளார்.
PMJJBY திட்டத்தில் வெறும் 330 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் வரையில் க்ளைம் செய்து கொள்ள முடியும்.
மோடியால் தொடங்கப்பட்ட திட்டம்
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 50 வயதுள்ளவர்கள் எடுக்க முடியும். இந்த திட்டத்தினை வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தான் எடுக்க முடியும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு இன்சூரன்ஸ் திட்டமாகும்.
55 வயது வரை காப்பீடு
வங்கி கணக்கு வைத்துள்ள 18 வயது முதல் 50 வயது வரையிலான எவரும், இந்த திட்டத்தில் இணைய முடியும். 50 வயது நிறைவடைதற்கு முன்பு இந்த திட்டத்தில் இணைந்தால், தொடர்ந்து பிரீமியம் செலுத்தி வருபவர்கள் 55 வயது வரை ஆயுள் காப்பீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
பிரீமியம் எப்படி?
அரசின் இந்த காப்பீட்டுத் திட்டமானது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த பிரீமிய தொகையினை எந்த வங்கியில் நீங்கள் இணைகிறீர்களோ, அங்கு தான் செலுத்த வேண்டும். பெரும்பாலும் வங்கிகள் ஆட்டோமேட்டிக் டெபிட் மூலம் இந்த திட்டத்தின் பிரீமியத்தினை டெபிட் செய்து கொள்கின்றன.
ஒருவருக்கு ஒரு பாலிசி
உங்களுக்கு பல வங்கிகளில் சேமிப்பு கணக்கு இருக்கலாம். எனினும் நீங்கள் அனைத்து வங்கிகளிலும் இந்த திட்டத்தினை தொடங்க முடியாது. ஒருவருக்கு இந்த திட்டத்தின் மூலம் ஒரு பாலிசி தான் எடுக்க முடியும். ஆக இந்த திட்டத்திற்கு தகுதியான ஒருவர், உங்களுக்கு அருகில் உள்ள ஒரு வங்கி மூலம் இணைந்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.
பாலிசிதாரர் இறந்து விட்டால்
இந்த பாலிசியில் பாலிசிதாரர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால், நாமினி சம்பந்தபட்ட வங்கியினை அணுகி, உங்களது பாலிசி எண் மற்றும் வங்கி கணக்கு வைத்திருந்தவர் பெயரை கூறலாம். அதோடு க்ளைம் விண்ணப்பத்தினை பெற்று, தேவையான விவரங்களுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொடுக்கலாம். அப்படி இல்லையெனில் அனைத்து ஆவணங்களையும் வங்கி பெற்றுக் கொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்பிக்கும்.
எவ்வளவு நாட்களுக்குள் க்ளைம்
க்ளைம் செய்ய இறப்பு சான்று, மருத்துவமனை ரசீது, (Discharge Receipt) போட்டோ, கேன்சல் செய்யப்பட்ட செக் லீப், நாமினியின் வங்கிக் கணக்கு என பல சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கொடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களது ஆவணங்களை சரிபார்த்து, 30 நாட்களுக்குள் உங்களுக்கு க்ளைம் செய்து கொடுக்கும்.
அரசின் வசமுள்ள பங்குகள் மட்டுமே விற்பனை
கடந்த நிதியாண்டில் எல்ஐசி 21 மில்லியன் தனி நபர் பாலிசிகளை வெளியிட்டுள்ளது. இது புதிய தனி நபர் பாலிசி வெளியீடுகளில் கிட்டதட்ட 75% கொண்டுள்ளது. எல்ஐசி ஐபிஓ-வில் அரசிடம் உள்ள பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. புதிய பங்குகள் மட்டுமே வெளியிடப்படவுள்ளன.
வரலாறு காணாத வெளியீடு
தற்போதைய நிலையில் அரசின் வசம் 632.49 கோடி பங்குகளுக்கும் மேலாக உள்ளது. இதன் முகமதிப்பு 10 ரூபாயாகும். இந்த நிலையில் இந்த பங்கு வெளியீடானது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீடாக இருக்கும்.
LIC IPO: PMJJBY policyholders eligible for LIC IPO at discount
LIC IPO: PMJJBY policyholders eligible for LIC IPO at discount/எல்ஐசி ஐபிஓ.. PMJJBY பாலிசிதாரர்களுக்கும் சலுகை கிடைக்கும்..!