உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில், இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.
‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு
ரஷ்யா
எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இரு நாடுகளின் எல்லைகளில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, அமைதிக் குழு என்ற பெயரில், எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மேலும், உக்ரைனுக்கு சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில், ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீரிக்குமாறு விளாடிமிர் புதினை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து அவர், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை சுதந்திர நாடாக அங்கீகரித்தார்.
இதன் காரணமாக, உக்ரைன் – ரஷ்யா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், அமெரிக்கா, உக்ரைன், மெக்சிகோ மற்றும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று தொடங்கியது.
‘முட்டாள்தனம்!’ – ரஷ்யாவை கடுமையாக சாடிய அமெரிக்கா!
இந்தக் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:
ரஷ்யா – உக்ரைன் இடையே பதற்றம் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க உடனடியாக முன்னுரிமை அளிக்க வேண்டும். ராணுவ விரிவாக்கத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமான சூழ்நிலையால், பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு அவசியம். 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உட்பட பலர், உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். அனைத்து தரப்பினரும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான இன்றியமையாத தேவையை நாங்கள் வலுவாக வலியுறுத்துகிறோம். அதன் மூலம் பரஸ்பர இணக்கமான தீர்வு விரைவில் எட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விரைவில் ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.