லக்னோ: ஒரே கண்ணில் சாதி, மறு கண்ணில் மதம் என ஒரே மூக்கு கண்ணாடி மூலமாக பாகுபாடு பார்ப்பவர் அகிலேஷ் என அமித் ஷா விமர்சித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. மீதம் நான்கு கட்ட தேர்தல் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ., சார்பாக பல்வேறு பிரசார பேரணிகளில் கலந்து கொண்டு வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அவர் விமர்சித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குறித்து அமித் ஷா விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தான் கண்ணாடி அணிந்து அனைவரையும் சமமாக பார்ப்பதாகவும் அதே சமயத்தில் அகிலேஷ் கண்ணாடி அணிந்து மதம், சமூகம் ஆகியவற்றை வெவ்வேறாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் தலைவர்களான மாயாவதி, அகிலேஷ் ஆகிய இருவரும் அவர்களது ஆட்சியின்போது தங்கள் சமூக மக்களுக்கு மட்டுமே பல்வேறு திட்டங்களை அறிவித்து இருந்தனர். ஆனால் பாஜக உத்திரப்பிரதேச மாநில குடிமக்கள் அனைவருக்கும் சாதி, மத பேதம் பார்க்காமல் அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கடந்த யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பல்வேறு மதத்தினர் பலனடைந்துள்ளனர். பிரதமர் மோடியின் தாரக மந்திரமான ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்கிற அடிப்படையிலேயே பாஜ., செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement