ஆந்திராவின் விசாகப் பட்டினத்தில் “கடற்படை ஆய்வு 2022” நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கடற்படையின் 63 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் மற்றும் 50 விமானங்கள் அணிவகுத்தன. சுமார் 10,000 வீரர்கள் கடற்படை யின் வலிமையை பறைசாற்றினர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் சென்று அணிவகுப்பை பார்வையிட்ட அவருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் பேசியதாவது:
உலகளாவிய வர்த்தகத்தின் பெரும்பகுதி இந்திய பெருங்கடல் வழியாக நடைபெறுகிறது. எனவே கடல்சார் பாதுகாப்பு மிக முக்கியம்.
கரோனா தொற்றின் போது, ‘மிஷன் சாகர்’ மற்றும் ‘சமுத்திர சேது’ ஆகியவற்றின் கீழ் உலகின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள், வெளிநாட்டினர் மீட்கப் பட்டனர். போரின் போது விசாகப் பட்டினம் சிறந்த பங்களிப்பை வழங்கியது.
அப்போது பாகிஸ்தானின் நீர் மூழ்கிக் கப்பல் ‘காஜி’ மூழ்கடிக்கப்பட்டதில் கிழக்கு கடற் படை பிரிவின் வீரச் செயலை மறக்க முடியாது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் இந்திய கடற் படை தன்னிறைவு அடைந்து வருகிறது. இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் பேசினார். -பிடிஐ