விசாகப்பட்டினம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடாவில் நடந்த கடற்படை அணிவகுப்பை பார்வையிட்டார்.
நாட்டின், 75வது சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கடற்படையின் 75 ஆண்டு சேவையை குறிக்கும் வகையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடா கடற்பகுதியில், கடற்படை அணிவகுப்பு நடந்தது.இதை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘ஐ.என்.எஸ்., சுமித்ரா’ போர் கப்பலில் சென்று பார்வையிட்டார்.
50 போர் விமானங்கள்நான்கு வரிசைகளில் வந்த, 44 போர் கப்பல்களின் அணிவகுப்பு மரியாதையை, அவர் ஏற்றுக் கொண்டார். இவ்விழாவில், 60க்கும் மேற்பட்ட கப்பல்கள், 50 போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் பங்கேற்றன. ‘எம்.கே-1 ஹெலிகாப்டர்’ வாயிலாக, கடலில் சிக்கியோர் மீட்கப்படுவதை மீட்பு அணியினர் செய்து காட்டினர்.
‘ஐ.என்.ஏ.எஸ்., 551’ உள்ளிட்ட போர் விமானங்கள், வானில் சாகசங்கள் செய்ததையும், ராம்நாத் கோவிந்த் கண்டு ரசித்தார்.
சாகசம்
‘ஐ.என்.எஸ்., கர்னா’ கப்பலின் வீரர்கள் விமானத்தில் சென்று, 6,000 அடி உயரத்தில் இருந்து கடலில் குதித்து சாகசம் செய்தனர். கடற்படை அணிவகுப்பை பார்வையிட்டு திரும்பிய ராம்நாத் கோவிந்துக்கு, 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ராம்நாத் கோவிந்த் மனைவி சவிதா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே, கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
12வது கடற்படை அணிவகுப்பு
நாடு சுதந்திரம் அடைந்த பின், தற்போது, 12வது முறையாக கடற்படை அணிவகுப்பு நடந்துள்ளது. வழக்கமாக, ஜனாதிபதியின் பதவிக் காலத்திற்குள் ஒருமுறை இத்தகைய அணிவகுப்பு நடக்கும். கடைசியாக, 2016ல் நடந்த கடற்படை அணிவகுப்பை, அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார். அடுத்து, 2020ல், அந்தமான் – நிகோபார் அருகே நடக்கவிருந்த அணிவகுப்பு நிகழ்ச்சி, கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.