கனடாவில் அவசரநிலை நீட்டிக்க தீர்மானம்| Dinamalar

டொரன்டோ:கனடாவில் டிரக் டிரைவர்களின் போராட்டத்தை ஒடுக்க, அரசுக்கு வழங்கிய அவசர நிலை அதிகாரத்தை நீட்டிக்கும் தீர்மானம், அந்நாட்டு பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது.
வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்பது உள்ளிட்ட அரசின் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி, டிரக் டிரைவர்கள் மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தால், அமெரிக்கா – கனடாவின் பல எல்லைகள் மூடப்பட்டன. வர்த்தகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தலைநகர் ஒட்டாவாவில், பார்லி., முற்றுகை போராட்டம் நடந்தது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, அவசர நிலை பிரகடனத்திற்கு, கனடா பார்லி., ஒப்புதல் வழங்கியது. இதனால், அமைதியை சீர்குலைக்கும் வகையில் போராட்டம் நடத்துவோரை கைது செய்து, அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க, அரசுக்கு அதிகாரம் கிடைத்தது.

இதையடுத்து, போராட்டம் சற்று ஓய்ந்தது. சாலை தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. எல்லையில் போக்குவரத்து சீரானது.இந்நிலையில், அவசர நிலை அதிகாரத்தை மேலும் நீட்டிக்கும் தீர்மானம், பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ”ஒட்டாவாவின் புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ள டிரக் டிரைவர்கள், மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது.
”இதனால், அவசர நிலை அதிகாரத்தை நீட்டிக்க ஆதரவு தர வேண்டும்,” என்றார். இதையடுத்து நடந்த ஓட்டெடுப்பில், மொத்தமுள்ள 185 எம்.பி.,க்களில், தீர்மானத்திற்கு ஆதரவாக, 151 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். இதைத் தொடர்ந்து, தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.