இந்தியாவில் கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடங்கி அச்சுறுத்தியது. இது கரோனா பரவல் 3-வது அலையாக தொடங்கியது. இந்த வைரஸ் படிப்படியாக குறைந்து மார்ச் மாத இறுதியில் முடிவுக்கு வரும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இறப்பு மற்றும் புதிய தொற்று பாதியாக குறைந்துள்ளது.
கடந்த 14-ம் தேதியில் இருந்து 20-ம் தேதி வரை கரோனா இறப்பு 1,898 ஆக இருந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் 3,366 ஆக இருந்தது. தற்போது 44 சதவீதம் குறைந்துள்ளது.
அதேபோல், புதிதாக தொற் றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4-வது வாரமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 1.73 லட்சம் பேர் கரோனாவுக்கு பாதிக் கப்பட்டுள்ளனர். இந்த எண் ணிக்கை அதற்கு முந்தைய வாரத்தில் 3.94 லட்சமாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 16,820 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை 155 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2.15 லட்சம் பேர் மட்டுமே நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் நாட்டில் 3-வது அலை எதிர்ப்பார்த்த காலத்துக்கு முன்பே முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
ராணி எலிசபெத்துக்கு கரோனா: குணமடைய பிரதமர் வாழ்த்து
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை பக்கிங்காம் அரண்மனை நேற்று உறுதிப்படுத்தியது. அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ராணி எலிசபெத் பூரண குணமடையவும், நல்ல உடல்நலத்துடன் விளங்கவும் பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
தற்போது வின்ட்சர் பங்களாவில் தங்கியுள்ள எலிசபெத் (95), அடுத்த சில நாட்களுக்குப் பிறகு அன்றாட பணிகளை மேற்கொள்வார் என்று பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.-பிடிஐ