கர்நாடகாவின் நந்தி மலையில் ஏறும்போது 300 அடி கீழே விழுந்து பாறைத்திட்டில் சிக்கிக் கொண்ட 19 வயது இளைஞரை விமானப் படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்றசுற்றுலா மையமாக விளங்கும் நந்தி மலை உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் படிக்கும் டெல்லியை சேர்ந்த நிஷாங்க் என்ற 19 வயது மாணவர் நேற்று முன்தினம் இங்கு மலையேற்றம் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பலநூறு அடி ஆழமுள்ள பள்ளத்தில் அவர் தவறி விழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிக்கபள்ளாப்பூர் ஆட்சியர், எலஹங்காவில் உள்ள விமானப் படை தளத்துடன் தொடர்பு கொண்டார்.
இதையடுத்து மாவட்ட காவல் துறையினரும் எலஹங்காவில் இருந்து வந்த விமானப் படை வீரர்களும் அந்த இளைஞரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். விமானப் படையின் எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர் உதவியுடன் முதலில் அந்த இளைஞரை தேடும் பணி நடைபெற்றது. மாவட்ட காவல்துறை வழிகாட்டுதலுடன் நடந்த இப்பணியில் 300 அடிக்கு கீழே பாறைத்திட்டு ஒன்றில் நிஷாங்க் சிக்கித் தவிப்பது தெரியவந்தது.
இதையடுத்து வானில் ஹெலிகாப்டர் பறந்த நிலையிலேயே கயிறு மூலம் கீழே இறங்கிய வீரர், நிஷாங்கை பத்திரமாக மீட்டார்.
ஹெலிகாப்டரில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் இளைஞக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு அந்த இளைஞருடன் ஹெலிகாப்டர் எலஹங்கா திரும்பியது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் நிஷாங்க் சேர்க்கப்பட்டார்.
சவாலான மீட்புப் பணியில் துணிச்சலுடன் ஈடுபட்ட விமானப் படை வீரர்களுக்கு பலரும் பாராட்டுதெரிவித்தனர். சமீபத்தில் கேரள மாநிலம் மலம்புழா மலையில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞர் ஒருவரை விமானப் படை மீட்டது குறிப்பிடத்தக்கது.