புதுடெல்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹60 அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களில் இருந்து கால்நடை தீவனத்தை கொள்முதல் செய்வதில் ₹950 கோடிக்கு ஊழல் நடந்தது. கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த கால்நடை தீவன ஊழல் தொடர்பாக சிபிஐ சார்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இன்னொரு முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா, முன்னாள் எம்பி ஜெகதீஷ் சர்மா, கால்நடை துறை அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. தும்கா, தேவ்கர், சைபாசா உள்ளிட்ட கருவூலங்களில் நடந்த மோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் லாலுவுக்கு ஒட்டுமொத்தமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, லாலு உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனில் இருந்து வருகிறார்.இந்நிலையில், டொரந்தா கருவூலத்தில் நடந்த ₹139 கோடி மோசடி வழக்கின் விசாரணை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. லாலு பிரசாத் உள்பட 75 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி நீதிமன்றம் கடந்த 15ம் தேதி தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதில் கால்நடை தீவனம் ஊழலில் தொடரப்பட்ட ஐந்தாவது வழக்கில் லாலுவுக்கு 5ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹60 லட்சம் அபராதத் தொகையும் விதிக்கப்படுகிறது என உத்தரவிடப்பட்டது. டொரந்தா கருவூல மோசடியில் மொத்தம் 170 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 55 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் அரசு சாட்சிகளாக மாறினர். 6 பேர் தலைமறைவாகி விட்டனர். லாலு பிரசாத்தின் வழக்கறிஞர் கூறுகையில், ‘‘லாலு 36 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்’’ என்றார்.