உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் 2-ம் இடத்தைப் பிடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் போராடுகின்றன என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 3-ம் கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் நேற்று செய்தி நிறுவனத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத்தேர்தலில் 2-ம் இடத்தைப் பிடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. வேறு எதுவும் நிகழப் போவதில்லை.
2017-ம் ஆண்டு முதல் சமாஜ்வாதி கட்சியில் எந்த மாற்றமும் இல்லை. அந்த கட்சியில் கிரிமினல், மாஃபியாக்கள், தீவிரவாதிகளுக்கு உதவுபவர்களுக்கு டிக்கெட்கள் தரப்பட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி மாறவே இல்லை.
பிரதமர் பதவியை அடையும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். நான் பாஜகவின் சாதாரண தொண்டன். கட்சி எனக்கு என்ன வேலை கொடுத்துள்ளதோ அதைச் செய்து வருகிறேன்.எந்தப் பதவியையோ அதிகாரத்தையோ தேடி நான் ஓடியதில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி லக்கிம்பூர் கெரியில் நடந்த சம்பவத்தை, பிரிட்டிஷ் காலத்தில் நடந்த ஜாலியன்வாலா பாக் சம்பவத்துடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒப்பிட்டு பேசி வருகின்றார். இந்த விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு (எஸ்ஐடி) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மாநில அரசுதலையிடுவதற்கு எதுவும் இல்லை.
பாஜக அரசு கொண்டு வந்தபல்வேறு நல்லத் திட்டங்களால் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அவர்கள் நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள். கோரக்பூர் நகரப்புறத் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இங்கு நான் எளிதில் வெற்றி பெறுவேன்.
இந்தத் தொகுதி பாஜகவின் கோட்டை. பாரம்பரியமிக்க இந்த பாஜக தொகுதிக்கு தொண்டர்கள் வெற்றி தேடித் தருவார்கள். சமாஜ்வாதி கட்சிக்கு திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தருவதால் எந்தப் பலனும் இல்லை. அவர்களுக்கு உ.பி.யில் மக்கள் ஆதரவு கிடையாது.
உ.பி.யில் 80% வாக்குகளை பாஜக கைப்பற்றும். மீதமுள்ள 20% வாக்குகளைப் பெற எதிர்க்கட்சிகள் போட்டியிடுகின்றன. நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால்அதில் உண்மையில்லை. இந்தவிவகாரத்தில் எதிர்க்கட்சியினர்வாக்கு வங்கி அரசியல் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.