நொய்டா: சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நொய்டா நகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இப்படி வாகனம் ஓட்டும்போது சிறுவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என நொய்டா நகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.இது குறித்து நொய்டா நகராட்சி காவல்துறைக்குச் சுற்றறிக்கை அனுப்பிவைத்துள்ளது. அதில்,’சிறுவர்கள் நிதானம் இன்றியும், விதிகளை தெரிந்து கொள்ளாமல் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சிறுவர்கள் வாகனங்களை ஓட்டிக்கொண்டு வெளியே வந்தால் அவர்களது பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என கூறப்பட்டுள்ளது.