பானாஜி:
40 தொகுதிகளை கொண்ட கோவா சட்ட சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கோவாவில் இந்த தடவை எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்
சில பகுதிகளில் சுயேட்சைகள் வெற்றி பெரும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு ஆட்சி அமைப்பதில் சுயேட்சைகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கோவாவில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். இந்த எண்ணிக்கை கிடைக்காத பட்சத்தில் அடுத்து என்ன செய்வது என்று பாரதிய ஜனதாவும், காங்கிரசும் இப்போதே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சுயேட்சைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான தீவிர முயற்சிகளில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மந்திரி பதவி உள்பட பல்வேறு சலுகைகள் தருவதாக இப்போதே சுயேட்சைகளுக்கு ஆசை காட்டப்பட்டு வருகிறது.
இதனால் கோவா அரசியலில் இப்போதே குதிரைப்பேரம் நடந்து வருகிறது. வெற்றி பெற வாய்ப்பு உள்ள சுயேட்சைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், பாரதிய ஜனதா 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பாரதிய ஜனதா அதிரடியாக ஆட்சி அமைத்தது. அதேபோன்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்… உத்தர பிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட தேர்தல் – பிரசாரம் நிறைவு