”ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது ஏன்?” – நள்ளிரவில் நடந்தது என்ன?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் இணைந்து திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை சரமாரியாக தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சையானது.
image
இதனையடுத்து திமுகவை சேர்ந்த நரேஷ் தண்டையார்ப்பேட்டை போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நேற்றிரவு பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் வைத்து வண்ணாரப்பேட்டை  துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை ஜார்ஜ்டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா முன்பு   ஆஜர்படுத்தினர். வருகிற 7-ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதன் அடிப்படையில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.
இரவில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வர உள்ளதாக கூறப்பட்டது. அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும், அதைபோல ஜார்ஜ்டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீடு இருக்கும் எழும்பூர் நீதிபதிகள் குடியிருக்கும் வளாகத்திலும் வாசலிலும் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
கைதான ஜெயக்குமாரை ஆஜர்படுத்துவதில் சிரமமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நீதிபதி இவ்வளவு பேர் எதற்காக நீதிபதிகள் குடியிருப்புக்குள் நுழைந்துள்ளார்கள்? என காவல்துறையிடம் கேட்டு விசாரித்துள்ளார். மேலும் எழும்பூர் நீதிமன்ற அறையை விசாரணை நடத்த தரவும், அனைவரும் அங்கு செல்லவும், ஜெயக்குமாரை அங்கு ஆஜர்படுத்தவும் தலைமை பெருநகர குற்றவியல் நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதன்பிறகு தான் எழும்பூர் நீதிமன்றத்திற்குள் ஜெயக்குமாரை காவல்துறையினர் கொண்டு சென்றனர். ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்ற்குட்பட்ட வழக்கானது எழும்பூர் நீதிமன்றத்திற்குள் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகாலை வரை எழும்பூர் நீதிமன்றம் பகுதி, பட்டினப்பாக்கம் பகுதி, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் ஆகிய பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை இருக்ககூடிய நிலையில் முன்னாள் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமாரை வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 
இதனை தொடர்ந்து பூந்தமல்லி கிளை சிறையில் ஜெயக்குமார் அடைக்கப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் என்பதை கருத்தில் கொண்டு முதல் பிரிவு அறையை ஒதுக்க கேட்ட போது சிறைத்துறையினர் தரமறுத்துவிட்டதாக அவரது குடும்பத்தினர்  குற்றம்சாட்டி உள்ளனர். அறையை ஒதுக்காததால் ஜெயக்குமார் சிறையில் கொசுக்கடியில் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் ஜெயக்குமாருக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும்,  கைதானதால் மன உளைச்சலில் இரவு நேரத்தில் ஜெயக்குமார் மாத்திரை சாப்பிடவில்லை. இன்று காலையில் தான் குடும்பத்தினர் மாத்திரைகளை சிறைக்கு சென்று கொடுத்துள்ளனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாருக்கு, வீட்டிலிருந்து உணவு கொண்டு வர சிறைத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை ஜார்ஜ் டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா முன்பு வர உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.