நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் வசப்படுத்தியுள்ள திமுக, அனைத்து மாநகராட்சியிலுமே அசைக்க முடியாத அளவுக்கு இருப்பது, அக்கட்சியின் வெற்றி சதவீதமே வெளிப்படுத்துகிறது.
மொத்தம் 1,374 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடங்களில், இரவு 9.30 மணி வரை 1370 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 949 திமுக வேட்பாளர்களும், 164 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 73 பேரும், பாஜகவைச் சேர்ந்த 22 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 13 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 24 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த முடிவுகளின்படி, கட்சி வாரியாக மாநகராட்சி வார்டுகளின் வெற்றி விகிதம்: திமுக – 69.07% சதவீதம், அதிமுக – 11.94 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் – 5.31%, பாஜக 1.60 சதவீதம், சிபிஐ (எம்) – 1.75%, சிபிஐ – 0.95%.