நகர்ப்புறா உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக நிர்வாகியைத் தாக்கிதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அப்போது, சென்னை ராயபுரம் பகுதியில் ஒருவர் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக ஒருவரை அதிமுகவின பிடித்து தாக்கத் தொடங்கினர். அங்கே இருந்த ஜெயக்குமார், பிடிபட்ட நபரை தாக்க வேண்டாம் என்றும் அவருடைய கைகளை கட்டும்படி கூறினார். பிறகு, அந்த நபரின் சட்டையைக் கழட்டி அவருடைய கைகள் கட்டப்பட்ட நிலையில், அதிமுகவினருடன் சேர்ந்து ஜெயக்குமார் அந்த நபரை சட்டை இல்லாமல் சாலையில் நடக்கை வைத்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்று அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் திமுக தொண்டர் என்று தகவல் வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல், கொலை மிரட்டல் உள்பட 8 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நிர்வாகியைத் தடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்வதா என்று கேள்வி எழுப்பி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடலில், திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை திமுக சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், திமுக நிர்வாகியைத் தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பட்டினப்பாக்கத்தில் திங்கள்கிழமை இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடைய மகன் ஜெயவர்தன், “வீடு புகுந்து எனது தந்தையை போலீசார் பலவந்தமாக இழுத்து சென்றுள்ளனர். கைது பற்றி எந்த விவரமும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ஜனநாயக படுகொலையை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்வதா?
தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவிக்க திமுக முயற்சிப்பதன் வெளிப்பாடாகவே ஜெயக்குமார் கைது உள்ளது. இத்தனை ஆண்டுகளாகியும் கூட திமுக தனது ஜனநாயக விரோத செயல்களை கைவிடாதிருப்பது கண்டிக்கதக்கது.” என்று தெரிவித்துள்ளனர்.
திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு ஜெயவர்தன் தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் முன் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றா நடுவர் உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“