நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 22 வார்டுகளிலும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 56 வார்டுகளிலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 230 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆக, 308 வார்டு உறுப்பினர்களை இந்தத் தேர்தலில் தமிழக பாஜக பெற்றுள்ளது.
மாநகராட்சிகளை எடுத்துக்கொண்டால் கன்னியாகுமரியில் 11 வார்டுகளிலும், திருப்பூரில் 2 வார்டுகளிலும், கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் வேலூரில் தலா ஒரு வார்டை பாஜக கைப்பற்றியுள்ளது.
நகராட்சிகளை எடுத்துக்கொண்டால் கன்னியாகுமரியில் 21 வார்டுகள், தென்காசியில் 12 வார்டுகள், தேனியில் 4 வார்டுகள், ராமநாதபுரம் மற்றும் திருப்பூரில் தலா 3 வார்டுகள், ஈரோட்டில் 2 வார்டுகள், கரூர், கோவை, சிவகங்கை, தஞ்சை, திருப்பத்தூர், தூத்துக்குடி, நாமக்கல், ராணிப்பேட்டை, விருதுநகர் மற்றும் வேலூர் ஆகியவற்றில் தலா ஒரு வார்டை வென்றுள்ளது.
மாநகராட்சிகளைப் பொறுத்தவரையில் கன்னியாகுமரியில் 168 வார்டுகளிலும், ஈரோடு, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடியில் தலா 6 வார்டுகளிலும், கோவை மற்றும் நீலகிரியில் தலா 5 வார்டுகளிலும், தென்காசி மற்றும் தேனியில் தலா 4 வார்டுகளிலும், சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் சேலத்தில் தலா 3 இடங்களிலும், கரூர், தஞ்சாவூர், ராமநாதபுரத்தில் தலா 2 இடங்களிலும், அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக பாஜக தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை வெல்லாத இடங்களிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. மூலை முடுக்கெல்லாம் தாமரையை மலரச் செய்கிறோம். இந்த வெற்றியானது பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழக மக்கள் பாஜகவை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். பாஜகவை முழுமையாக ஏற்று பயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். நினைத்த வெற்றியை அடைந்து விட்டோம். இனி பாஜகவுக்கு ஏறுமுகம்தான். வருகின்ற காலம் நிச்சயமாக பாஜகவின் காலம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
எங்களின் வலிமையை உணர்த்துவதற்காகவே, இந்தத் தேர்தலில் தனித்து களம் கண்டோம். கடின உழைப்பால் இப்போது 3-வது இடத்திற்கு வந்துள்ளோம். தமிழகத்தில் பாஜக மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்கள் வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த தலைவர்களுக்கு நன்றி. பல இடங்களில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், நாங்கள் பெற்ற வாக்கு சதவீதம் மகிழ்ச்சியை கொடுக்கிறது. மக்கள் நலன் சார்ந்த அரசு திட்டங்களை பாஜக உறுதுணையாக இருந்து ஆதரிக்கும். பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் சோர்ந்துவிட வேண்டாம். தொடர்ந்து பயணிப்போம்” என்று கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பாஜகவின் வலிமையை உணர்த்தவே தனித்துப் போட்டியிட்டோம். அதேநேரம் அதிமுகவுடனான தேசிய கூட்டணி தொடரும். பாஜக வலிமை பெற்றுவருகிறது. ஒரு தேர்தலில் பின் தங்கிவிட்டது என்பதற்காக அதிமுகவை குறைத்து மதிப்பிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.