சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில் 4 வார்டுகளிலும், நகராட்சிகளில் 48 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 73 வார்டுகளிலும் பாமக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மொத்தமாக 125 வார்டுகளில் பாமக தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மாநகராட்சிகளைப் பொறுத்தவரையில் காஞ்சிபுரத்தில் 2 வார்டுகளிலும், கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் வேலூரில் தலா ஒரு வார்டிலும் வென்றுள்ளது.
நகராட்சிகளைப் பொறுத்தவரையில், சேலத்தில் 12 வார்டுகளிலும், ராணிப்பேட்டையில் 8 வார்டுகளிலும், கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 5 வார்டுகளிலும், அரியலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறையில் தலா 4 வார்டுகளிலும், ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர், திருவள்ளூர், தேனியில் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
பேரூராட்சிகளை எடுத்துக்கொண்டால், சேலத்தில் 15 வார்டுகளிலும், தர்மபுரி 11 வார்டுகளிலும், தஞ்சை, திருவண்ணாமலையில் தலா 6 இடங்களிலும், செங்கல்பட்டு, வேலூரில் தலா 5 இடங்களிலும், ஈரோடு, ராணிப்பேட்டையில் தலா 4 இடங்களிலும், கடலூரில் 3 இடங்களிலும், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், மயிலாடுதுறையில் தலா 2 இடங்களிலும், அரியலூர், விழுப்புரம், நாமக்கல்லில் தலா ஒரு வார்டையும் பாமக கைப்பற்றியது.
இந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “பாமக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை முன்வைத்து போட்டியிட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை முன்வைத்த பாமக-விற்கு கிடைந்துள்ள இந்த வெற்றி கவுரவமானது; ஆனால், போதுமானது அல்ல.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்தே அதிகார சுனாமி சுழன்றடிக்கத் தொடங்கி விட்டது. மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டிய இந்தத் தேர்தலில் பணம் மூலம் தான் வாக்குகள் வாங்கப்பட்டன.
ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பணத்தை மூலதனமாக வைத்து தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தன. தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பணம் படைத்தவர்களுக்கும், பணம் இல்லாதவர்களுக்கும் இடையே நடந்த ஒன்றாகத் தான் கருத வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவை விடவும் ஜனநாயகத்திற்கு பண நாயகத்தால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலும், ஆபத்தும் தான் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தின் வடக்கு எல்லையான கும்மிடிப்பூண்டியில் தொடங்கி, தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி வரை பாமக பரவலாக வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இனி வரும் தேர்தல்களில் பாமக-வின் வெற்றி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாமக பொறுத்த வரை வெற்றி – தோல்விகள் தற்காலிகம். மக்கள் பணி தான் நிரந்தரம். அந்த வகையில் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக பாமக எப்போது போல் முதல் கட்சியாக குரல் கொடுக்கும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், வெற்றியை பெற முடியாமல் போனவர்களும், நமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக வழக்கம் போல கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றிகளைக் குவிக்க உத்திகளை வகுத்து அதன்படி பாமக செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.