மும்பை:”நிதித் துறை செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,” என, நிதி கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சிலின், 25வது உயர்மட்டக் குழு கூட்டம், மும்பையில், நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
நிதிச் சந்தை ஸ்திரமாக செயல்பட வேண்டும். இதற்கு எதிராக உருவாகும் சவால்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக உக்ரைன் பிரச்னை, இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மைக்கு சவாலாக உள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உருவாகி வரும் புதிய சவால்கள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ள நிதித் துறை செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அனைவருக்கும் நிதிச் சேவைகள் கிடைக்கவும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பங்குச் சந்தை உள்ளிட்ட நிதி கட்டுப்பாட்டு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement