சிவமொக்கா,
கர்நாடகா மநிலம் சிவமொக்காவில் பஜ்ரங் தள் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இதனிடையே, ஹிஜாப் விவகாரம் உள்பட அனைத்து கோணங்களிலும் இந்த கொலை வழக்கில் விசாரணை நடப்பதாக கர்நாடக உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
மேலும் உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா கூறுகையில், ஹிஜாப் சர்ச்சைக்கு பின்புலத்தில் உள்ள அமைப்புகளுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடைபெறுகிறது. நேற்று கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பஜ்ரங் தள் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தின் முழு விவரம்;
கர்நாடக மாநிலம் சிவமொக்கா டவுன் சீகேஹட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (வயது 24). பஜ்ரங்தள் பிரமுகரான இவர் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தது.இதைதொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காலை ஹர்ஷாவின் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஜ்ரங்தள மற்றும் இந்து அமைப்பினர் சீகேஹட்டி பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையோரம் நின்ற வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். சிவமொக்கா டவுன் பஸ் நிலையம் அருகே சென்ற அவர்கள், அங்கிருந்த பஸ் மற்றும் கார்கள் மீது கல்வீசி தாக்கினார்கள்.
இதேபோல், சிவமொக்கா நகரில் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வீச்சில் 2 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவியது. அப்போது அங்கு வந்த போலீசார், இந்து அமைப்பினா் மீது தடியடி நடத்தினர். மேலும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகைக்குண்டும் வீசி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த நிலையில், ஹர்சாவின் இறுதி ஊர்வலத்தின்போது இந்து அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். தள்ளுவண்டிகளுக்கும் தீவைத்து எரித்தனர்.
பொருட்களை கால்வாயில் தூக்கி வீசினார்கள். இதையடுத்து போலீசார் அங்கு வந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இந்த நிலையில் ஹர்ஷா கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது.