பெங்களூரு: “ஹிஜாப்புக்கு விதித்த தடை என்பது வகுப்பறையிலும் வகுப்பு நேரங்களிலும் மட்டுமே” என்று கர்நாடக அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் அணிவது தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் ஜேஎம் காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு சார்பில் இன்று அட்வகேட் ஜெனரல் (ஏஜி) பிரபுலிங் நவத்கி தனது வாதத்தை தொடங்கினார்.
அப்போது, “ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாத மதப் பழக்கம் அல்ல. ஆனால், இன்றியமையாத மதப் பழக்கமாகக் கருதினால், இஸ்லாமிய பெண்களுக்கும் அதை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது ஒரு தனிநபரின் சுதந்திரத்தைப் பாதிக்கிறது. விரும்புவதை அணிவதும், விரும்பாததை அணியாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் சுதந்திரம். ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்புவதை அணிய விருப்பம் உள்ளது. நீதித்துறை அறிவிப்பின் மூலம் மதங்கள் அங்கீகரிக்கப்பட முடியாது.
ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்துவது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஹிஜாப் அணியலாமா, வேண்டாமா என்ற முடிவை சம்பந்தப்பட்ட பெண்களிடம் விட்டு விட வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவு மற்றும் 25-வது பிரிவுகளின் கீழ் ஹிஜாப் அணிவது கருத்து சுதந்திரத்திற்கான உரிமையின் ஒரு பகுதி என மாணவிகள் சார்பில் வாதிடப்பட்டது. இது முற்றிலும் தவறு. அதுமட்டுமில்லாமல், இந்த வாதம் தற்போது நடக்கும் பிரச்சனைக்கு முற்றிலும் முரணானது.
19 (1) (a) சட்டப்பிரிவானது கருத்து சுதந்திரம் உள்ளிட்டவற்றை உறுதி செய்கிறது. நாட்டில் ஹிஜாப் அணிய தடை இல்லை. ஹிஜாப் அணிவதற்கான உரிமை 19(2) இன் கீழ் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் 11-ம் விதியின் (கர்நாடகா கல்வி விதி) கீழ் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் சட்டத்திட்டத்துக்கு உட்பட்டு ஆடை உள்ளிட்ட விவகாரங்களில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வழிவகை செய்கிறது.
பள்ளி வளாகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எந்த தடையும் இல்லை. வகுப்பறையிலும் வகுப்பு நேரங்களிலும் மட்டுமே ஹிஜாப் அணிய வேண்டாம் என்கிறது அரசு விதித்த அந்தத் தடை. இது மத வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பொருந்தும்” என்று வாதிட்டார்.