கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ஊடக அறிக்கைகளின்படி, முன்னணி சுவிஸ் வங்கியின் தகவல்களிலிருந்து 1,400 பாகிஸ்தான் குடிமக்களுடன் இணைக்கப்பட்ட 600 கணக்குகளின் தரவுகள் கசிந்தன.
அதில் பிரபல ஆங்கில இதழ் வெளியிட்ட அறிக்கையில், சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனமான கிரெடிட் சூயிஸில், பாகிஸ்தானின் முன்னாள் ஐ.எஸ்.ஐ தலைவர் ஜெனரல் அக்தர் அப்துர் ரஹ்மான் கான் உட்பட பல முக்கிய அரசியல்வாதிகள் கணக்கு வைத்திருப்பதாகத் தரவுகள் வெளியாகின. அந்த அறிக்கையின்படி, சோவியத் யூனியனுக்கு எதிரான தங்களின் போராட்டங்களை ஆதரிப்பதற்காக, ஆஃப்கானிஸ்தான் முஜாஹிதீன்களுக்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் பிற உதவிகளை அளிக்க முன்னாள் ஐ.எஸ்.ஐ தலைவர் கான் உதவியதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானியர்கள் வைத்திருக்கும் கணக்குகளில் சராசரி அதிகபட்ச இருப்பு 4.42 மில்லியன் சுவிஸ் பிராங்குகள்(நாணயம்) என மற்றுமொரு செய்தித்தாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
மேலும், அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தப்பட்ட பலர், தாங்கள் பதவியில் இருந்த காலகட்டத்தில் தொடங்கிய இந்தக் கணக்குகளைப் பற்றி விவரங்களைப் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த, பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான இந்த அறிக்கைகள் பாகிஸ்தானில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.