"பிடித்த காமெடி நடிகரின் குடும்பத்துக்கு விஜய் கொடுத்த ஒரு லட்ச ரூபாய்!"- நெகிழும் `காக்கா' கோபால்

காமெடி நடிகராக நமக்குத் தெரிந்தவர் காக்கா கோபால். மிருகங்களுடன் உரையாடுவது அவரின் தனித்திறன். ஆடு, மாடு, கோழி, காகம் என அனைத்து உயிரினங்களிடமும் அத்தனை இயல்பாய் உரையாடி அசர வைக்கிறார். இயக்குநராக வேண்டும் என எண்ணி நடிப்பிலிருந்து சில ஆண்டுகள் விலகியிருந்தவர் தற்போது மீண்டும் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து..

‘காக்கா’ கோபால்

“இப்ப மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். தொடர்ந்து, நல்ல நல்ல சீரியல்கள் வந்துட்டு இருக்கு. இத்தனை வருட இடைவெளியை சீக்கிரமே பூர்த்தி செய்திடுவேன்னு நம்புறேன்” என்றார். அவரிடம் மறைந்த காமெடி நடிகர் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ டவுசர் பாண்டி என்கிற பாரி வெங்கட் குறித்து கேட்டபோது,

பாரி அண்ணனை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். சாப்பாடுக்கே வழியில்லாம நான் இருந்தப்ப எப்போல்லாம் நாங்க சந்திக்கிறோமோ அப்போல்லாம் நான் கேட்காமலே சாப்பிட காசு கொடுத்துட்டு போவார். அவர் பணக்காரர் எல்லாம் இல்லைங்க. அவர்கிட்ட கடைசியா இருக்கிற காசைக்கூட என்கிட்ட கொடுத்துட்டு சிரிச்சிட்டே போவார். அந்த மாதிரியான மனசு உள்ள நல்லவர்.

‘காக்கா’ கோபால்

எனக்கு பல உதவிகள் பண்ணியிருக்கார். சினிமாவில் பாரி அண்ணன் மிகப்பெரிய கலைஞன். ஆன் தி ஸ்பார்ட்டில் காமெடி டிராக் கிரியேட் பண்ணுவார். ‘திருநெல்வேலி’ படத்தில் பாரி அண்ணனும், நானும் நடிச்சிருந்தோம். அந்த பட ஷுட்டிங் முடிச்சிட்டு நாங்க ரெண்டு பேரும் கிளம்புறதா இருந்துச்சு. அவர் டைரக்டர்கிட்ட, ‘காக்கா நல்லா நடிப்பான். நீங்க அவனுக்கு ஒன்னுமே கொடுக்கலைன்னு வருத்தப்படுறான்’னு சொன்னார். சரி, நாளைக்கு எஸ்.எஸ் சந்திரனுடன் ஒரு காமெடி டிராக் இருக்கு. அதில் இவனும் பண்ணட்டும்னு டைரக்டர் சார் சொன்னார். சரிடா இருந்து நடிச்சிட்டு வான்னு சொல்லிட்டு பாரி அண்ணன் கிளம்பிட்டாரு.

நான் ஷுட்டிங் முடிச்சிட்டு சென்னைக்கு வரேன். இங்கே அண்ணனைக் காணோம்னு ஒருவாரமா தேடிட்டு இருக்காங்க. ஊருக்கு திரும்பினப்போ பெரம்பலூர் பக்கத்துல நடந்த விபத்தில் பாரி அண்ணன் இறந்துட்டாருங்கிற தகவல் கிடைச்சது. எல்லா நகைச்சுவை நடிகர்களும் சேர்ந்து அவருடைய உடலை மீட்டு சென்னையில் சடங்குகள் எல்லாம் செய்து முறையா அண்ணனுக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதைகளைச் செலுத்தினோம்.

‘காக்கா’ கோபால்

அண்ணன் இறந்த செய்தி கேட்டு, நடிகர் விஜயும், அவருடைய தந்தை சந்திரசேகர் சாரும் டி நகரில் உள்ள பாரி அண்ணன் வீட்டுக்கு வந்து அவங்க மனைவியிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்துட்டு, அஞ்சலி செலுத்தி விட்டு போனாங்க. ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் பாரி அண்ணனுடைய காமெடி விஜய் சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஒரு நல்ல நகைச்சுவை கலைஞனை இழந்துட்டோம்!’ என்றார்.

இன்னும், சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து நடிகர் காக்கா கோபால் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோ காண், லிங்கை கிளிக் செய்யவும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.