பிரதமர் மோடியை தலைமைச் சேவகன் (பிரதான் சேவக்) என்று அனைவரும் அழைப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து `கூ’ சமூக வலைத்தளத்தில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு கூறியுள்ளதாவது:
பல்வேறு நிகழ்ச்சிகளில் தன் காலில் விழுந்து வணங்க வரும் மனிதர்கள், தலைவர்களை தடுத்து நிறுத்தி கட்டித் தழுவிக் கொள்கிறார் பிரதமர் மோடி. பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்களை இவரே வணங்கவும் செய்கிறார்.
காரண காரியம் இல்லாமல் யாரும் அவரை தலைமைச் சேவகன் என்று சொல்லவில்லை. ஒரு நிகழ்ச்சியில் துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களை கழுவி தூய்மைப்படுத்துகிறார் பிரதமர். இதனால்தான் அவரை பிரதம சேவகன் என்று அழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை வணங்க வரும் தலைவர்களை பிரதமர் மோடி வணங்கி வரவேற்கும் காட்சிகளும், துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களை கழுவும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஒரு தலைவர் பிரதமர் மோடியிடம் ஒரு சிலையை பரிசாகக் கொடுத்த பின்னர் அவர்காலில் விழ முயற்சிக்கிறார். அவரைத் தடுக்கும் பிரதமர் மோடி, அவரது காலைத் தொட்டு வணங்கும்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், கடந்த ஆண்டு வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் அமைக்கப்பட்டிருந்த நாற்காலியை எடுக்கச் சொல்லும் பிரதமர், தரையில் அமர்ந்து துப்புரவுத் தொழிலாளர்களுடன் உரையாடும் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.