உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏழு கட்ட தேர்தலில் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. நாளை 4-வது கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. மார்ச் 7-ந்தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்பின் மார்ச் 10-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
100 சதவீத வாக்குகள் பதிவாக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் லக்னோவில் உள்ள கல்லூரி ஒன்று பெற்றோர்கள் வாக்களித்தால் 10 வெகுமதி மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
லக்னோவில் உள்ள கிறிஸ்ட் சர்ச் கல்லூரியின் முதல்வர் ராகேஷ் குமார் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாளை நடைபெறும் 4-வது கட்ட வாக்குப்பதிவு மற்றும் அதன்பின் நடைபெறும் தேர்தலில் இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் வாக்களித்தால் அவர்களுக்கு வெகுமதியாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். 100 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாக வேண்டும் என்பதை ஊக்குவிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும், படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் தேர்ச்சி பெற உதவும்’’ எனத் தெரிவித்துள்ளார்.