இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வங்கிகள் கடன் வழங்குவதைத் தடைசெய்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விசேட சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்து கடன்களை வழங்குவதால், அரசாங்கத்தின் வங்கி அமைப்பு எதிர்காலத்தில் இயங்க முடியாது மற்றும் வீழ்ச்சியடையக்கூடும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக அரசின் வங்கி அமைப்பு சீர்குலைந்தால் அதற்கு தாம் பொறுப்பேற்கப் போவதில்லை என கப்ரால் மேலும் அரசுக்கு அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்து கடன் வழங்குமாறு பல்வேறு தரப்பினர் வங்கிகளை வற்புறுத்தி வருவதாக அரசு வங்கிகளின் அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய கடன்கள் உச்ச வரம்பை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதே பிரச்சினைக்கு ஒரே தீர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அந்த கோரிக்கைக்கு அதிகாரிகள் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.