சேலம்: முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரு எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியிலேயே அதிமுகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சேலம் மாநகராட்சியில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவு கடந்த 18ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 16 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் எடப்பாடி நகராட்சி, அரசிராமணி, பூலாம்பட்டி பேரூராட்சிகள் உள்ளன.
15 வார்டுகள் கொண்ட அரசிராமணி பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியிலும் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.
சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையிலும் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. பல்வேறு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 37வது வார்டில் திமுகவின் திருஞானம் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 4,319. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் லட்சுமணன் 3,820 வாக்குகளை பெற்றார்.
22வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.சி.செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
1வது வார்டில் திமுகவின் தமிழரசன், 9வது வார்டில் திமுகவின் தெய்வ லிங்கம், 22வது வார்டில் அதிமுகவின் செல்வராஜ், 38வது வார்டில் திமுகவின் தனசேகர், 45வது வார்டில் திமுகவின் சுகாசினி, 53வது வார்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஷாதாஜ் வெற்றி பெற்றுள்ளனர்.