மும்பை இளம்பெண் கொடூரக் கொலை – மகனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி கொடுத்த தந்தை!

மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில், குற்றவாளியின் தந்தையே தனது மகனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி போலீஸாருக்கு கொடுத்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
image
மும்பையில் உள்ள மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்தவர் கேரல் (29). கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே,, கடந்த மாதம் 24-ம் தேதி தோழி ஒருவரை சந்திக்க போவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கேரல் சென்றுள்ளார். ஆனால், இரவு 10 மணிக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து கேரலை தேடி வந்தனர். இந்த சூழலில், கடந்த 3-ம் தேதியன்று பல்கார் நகரில் உள்ள புதர் ஒன்றில் கேரலின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர்.
image
பிரேதப் பரிசோதனையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டிப்பது தெரியவந்தது. இதையடுத்து, கேரலை கொலை செய்தவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது செல்போன் அழைப்புகள், வாட்ஸ் அப் தகவல்கள் உள்ளிட்டவற்றை வைத்து போலீஸார் விசாரித்ததில், அவரது நண்பரான ஜீக்கோ (27) என்பவருடன் தான் கேரல் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஜீக்கோவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். எனினும், அவர் உண்மையை கூறவில்லை.
image
அதே சமயத்தில், ஜீக்கோவின் தந்தையான அன்சேம், தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அப்போது, சம்பவம் நடந்த தினமான ஜனவரி 24-ம் தேதி இரவு, தனது மகன் ஜீக்கோ, மோட்டார் சைக்கிளில் வெளியே செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. அதேபோல, ஜீக்கோ வீட்டில் மறைத்து வைத்திருந்த அவரது லேப்டாப்பையும் எடுத்து, அதில் இருந்த சில ஆதாரங்களையும் அன்சேம் திரட்டியிருக்கிறார். பின்னர், காவல் நிலையத்திற்கு போன் செய்த அவர், தனது மகன் ஜீக்கோவுக்கு எதிரான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து, அவரது வீட்டுக்கு சென்ற போலீஸார் அவர் கொடுத்த ஆதாரங்களை எடுத்துச் சென்றனர். அந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே, ஜீக்கோவை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்த காரணத்தால் கேரலை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
image
இதுகுறித்து ஜீக்கோவின் தந்தை அன்சேம், செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜீக்கோவும், கேரலும் நண்பர்களாக இருந்தனர் என்பது மட்டுமே எங்களுக்கு தெரியும். மற்றபடி, அவர்கள் காதலித்த விஷயம் எங்களுக்கு தெரியாது. என்ன விஷயம் நடந்திருந்தாலும், கேரலை கொலை செய்யும் அளவுக்கு ஜீக்கோ சென்றிருக்கக் கூடாது. ஜீக்கோ தவறு செய்திருந்தால், அவர் நிச்சயம் தண்டனையை அனுபவிக்க வேண்டும். நான் நினைத்திருந்தால் எனது மகனை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், ஒரு குற்றவாளியை காப்பாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான், அவனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி போலீஸாரிடம் கொடுத்தேன்” என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.